Tuesday, June 11, 2019

பாங்கில் பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் கேட்டால் பெருவிரல்களை முத்தமிடுவது சுன்னத்

பாங்கில் பெருமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் கேட்டால் பெருவிரல்களை முத்தமிடுவது சுன்னத்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறினார்கள்

, "ஒருவர் அதானின்போது என் பெயர் சொல்லக் கேட்டு தன் பெருவிரல்நகங்களை முத்தமிட்டு கண்களிலும் தடவிக் கொள்வாரேயானால் அவர் ஒருபோதும் குருடாகமாட்டார். (நூல் : தப்ஸீர் ரூஹுல் பயான்)

جاء في كتاب حاشية مراقي الفلاح للطحطاوي في آخر باب الأذان (فائدة) ذكر القُهُستاني عن كنز العباد, أنه يستحب أن يقول عند سماع الأولى من الشهادتين للنبي صلى الله عليه وسلم: صلى الله عليك يا رسول الله, وعند الثانية: قرت عيني بك يا رسول الله, اللهم متعني بالسمع والبصر. بعد وضع إبهاميه على عينيه, فإنه صلى الله عليه وسلم يكون له قائداً في الجنة.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் உச்சரிக்கப்பட்டு ஸலவாத் சொல்லும் போது குறிப்பாக "அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்" என்று பாங்கில் கேட்டதும் 'முதல் அஷ்ஹது-அன்ன-முஹம்மதர் ரஸூலுல்லாஹ் என்று கேட்கும் போது 'ஸல்லல்லாஹு அலைக்க யாரஸூலல்லாஹ்' என்றும், இரண்டாவது 'அஷ்ஹது-அன்ன-முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று கேட்கும் போது , 'குர்ரத்து ஐனி பிக யாரஸூலல்லாஹ்' – உங்களைக் கொண்டே என் கண் குளிர்ச்சி என்று சொல்லி இருப் பெரும் விரல்களை முத்தி இரு கண்களில் வைப்பது முஸ்தஹப்பாகும்.

பின்

اللهم متعني بالسمع والبصر

'அல்லாஹும்ம-மத்திஃனி பிஸ்ஸம்யி வல் பஸரி - யா அல்லாஹ் கேள்வி, பார்வையைக் கொண்டு எனக்கு சுகிக்கச் செய்வாயாக! என்று சொல்ல வேண்டும். ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அ(ப்படி செய்த)வனை சுவர்க்கத்திற்கு இழுத்துச் செல்வார்கள். 

நூல்கள் : துர்ருல் முக்தார், கன்ஜுல் இபாத், பதாவா ஸூபிய்யா, கஹ்ஸதானி, பஹ்ருற்றாயிக், ஷரஹு விகாயா

கண்ணிய மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அறிவிக்கப்படுகிறது, "கியாமத் நீதி தீர்ப்பு நாளிலே, அதானின் போது என்பெயர் கேட்டவுடன் தன் பெருவிரல்களை தன் கண்களில் ஒற்றிக் கொள்வதை வழமையாக்கிக் கொண்டவரை நான் தேடுவேன். அவரை நான் சுவனத்திற்கு இட்டுச் செல்வேன்."
நூல் : ஸலாத் அல் மஸ்'ஊதி, பாகம் - 2, அத்தியாயம் - 20

அதானில் (பாங்கில்) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயர் கேட்கும் போது இருபெரும் விரலை முத்துவதும், இரு கண்களில் வைப்பதும் ஆகுமாகும். இமாம்கள் நமது ஷெய்குமார்கள் முஸ்தஹப்பு என்று தெளிவாக கூறியுள்ளார்கள்.

நூல் : பதாவா ஜமால் இப்னு அப்துல்லாஹ் இப்னு உமர் மக்கி

பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், "யாராயினும் ஒருவர் முஹம்மத் எனும் என் நாமத்தை தன் கரங்களால் தொட்டு அக்கரங்களை தன் உதடுகளால் முத்தமிட்டு கண்களிலும் தடவிக் கொள்வாரேயானால், அவர் அல்லாஹ்வை( நாளை மறுமை நாளில்) அவனுடைய நேர்வழிப்பெற்ற நல்லடியார்கள் காண்பது போல் காண்பார். அவர் பாவியாக இருந்தாலுங்கூட அவருக்காகப் பரிந்துரைப்பது எனக்கு நெருக்கமாகிவிடும்."

நூல் : அந் நவாபி'உல் அத்ரிய்யா

மேலும் நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களின் பெயர் கேட்கும் போது இரு பெரும் விரலை முத்தி கண்ணில் வைத்தால் குருடாக மாட்டான். ஒருக்காலமும் கண்வலி வராது.

நூல் : இமாம் மாலிக் மத்ஹப் கிதாப் : கிபாயத்துத் தாலிப்

ஒருமுறை கருணை மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் மஸ்ஜிதினுள் நுழைந்து ஒரு தூண் அருகே அமர்ந்துக் கொண்டார்கள். ஹஸ்ரத் அபூபக்ர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் அருகே அமர்ந்துக் கொண்டார்கள். ஹஸ்ரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு எழுந்து அதான் சொல்லத் தொடங்கினார்கள். அவர்கள் ,"முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்" என்றுக் கூறியப் போது ஹஸ்ரத் அபூபக்ர் ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு தங்களின் இரண்டு பெருவிரல் நகங்களையும் அவர்களின் கண்களில் வைத்து "குர்ரத்து ஐனி பிக யா ரசூலல்லாஹ்" ( யா ரஸூலல்லாஹ்! நீங்களே என் கண்களின் குளிர்ச்சி) என்று கூறினார்கள்.ஹஸரத் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அதானை முடித்தவுடன், பரிசுத்த மாநபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறினார்கள், "அபூபக்ரே! யாரொருவர் நீங்கள் செய்தது போல் செய்கிறாரோ, எல்லாம் வல்ல அல்லாஹ் அவரது பாவங்கள் அத்தனையையும் மன்னித்து விடுவான்."

(தfப்ஸீர் ரூஹுல் பயான்)

செய்யுதுனா இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்,

"மு'அத்தின் 'அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸூலுல்லாஹ்' என்று சொல்லுவதைக் கேட்டவர் 'மர்ஹபன் பி ஹபீபி' என்றும் 'குர்ரத்து ஐனி முஹம்மத் பின் அப்தில்லாஹ்' என்றும் கூறி இரண்டு பெருவிரல்களையும் முத்தமிட்டு தன் கண்களிலும் வைத்துக் கொண்டாரேயானால், ஒருபோதுமே குருடாகமாட்டார் என்பதோடு அவரது கண்கள் பீடைகளாலும் பாதிக்கப்பட மாட்டாது."

(மகாஸிதே ஹுஸ்னா)

நன்றி : அல் அஸ்ரார் மாத இதழ்