Saturday, December 10, 2016

மௌலிதுகள்-ஒரு-பார்வை

*மௌலிதுகள்-ஒரு-பார்வை*

http://sufimanzil.org/மௌலிதுகள்-ஒரு-பார்வை/

நமது நாட்டிலும், ஏனை பிற நாடுகளிலும் மௌலிது ஷரீஃப் என்பது முஸ்லிம்களால் வழமையாக ஓதப்பட்டு வருகிறது. இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது பாடப்படும் புகழ்பாக்களும், அவர்களின் சரித்திரங்களும், முஃஜிஸா –அற்புதங்களும், அன்னவர்களின் சிறப்பியல்புகள், உயர் குணநலன்கள் எடுத்தோதப்படுகின்றன.

அதேபோல் இறைநேசச் செல்வர்களின் வரலாற்றுச் சம்பவங்களும், அவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளும், அவர்கள் இஸ்லாத்திற்கு செய்த தியாகங்களும், கராமத் -அற்புதங்களும் எடுத்தோதப்படுகின்றன.

அல்லாஹு சுப்ஹான ஹுவத் தஆலா ஒரு சிலருக்கு தனிப் பெரும் ஆற்றல்களை நல்கியிருக்கிறான். அந்த ஆற்றல்களில் குறைவானோர் அல்லது அதில் தேவையுடையோர் அந்த ஆற்றல் மிகுந்தவர்களிடம் சென்று துஆ கேட்பதும் வஸீலா – உதவி தேடுவதும் நமது முஸ்லிம்களிடம் இருந்து வரும் வழமை. அதற்கேற்ப இறைநேசர்களின் மௌலிதுகளை ஓதுவதும் இஸ்லாத்தில் உள்ளதாகும். இதனால் தாங்கள் எண்ணிய எண்ணம் நிறைவேறுகிறது என்று நம்புகிறார்கள். ஆனால் எல்லாம் இறைவன்தான் தருகிறான் என்ற நம்பிக்கை முஸ்லிம்கள் மத்தியில் ஆழப் பதிந்துள்ளது.
இவ்வாறு நபிகளின் புகழ்பாடும் மௌலிதுகளையும், இறைநேசர்களின் புகழ்பாடும் மௌலிதுகளையும் ஓதுவது ஷிர்க், பித்அத், ஹராம் என்று பலவாறு பலர் கூறித் திரிகின்றனர். இவர்களின் கூற்றுக்கள் உண்மைதானா?

இஸ்லாத்திற்கு உட்பட்டதுதானா? நபிகளார் மௌலிது ஓதுவதை அனுமதித்துள்ளார்களா? குர்ஆனில் அதற்கு ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் விளங்கிக் கொள்வதற்காக இக்கட்டுரை தொகுத்தெழுதப்பட்டுள்ளது.

மௌலிது என்றால் என்ன?

மௌலிது என்னும் வார்த்தைக்கு அரபி மொழியில் பிறப்பு என்று பொருளாகும். இஸ்லாமியர்களின் வழக்கத்தில் நபிகள் நாயகம் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்றும் இறைநேசர்கள் ஆகியோர்களின் பிறப்பு, வாழ்க்கை, வரலாறு, அற்புதங்கள், மாண்புகள் ஆகியவற்றைக் குறித்து பாடப்பட்ட கவிதைகளுக்கு மௌலிது என்று பெயர்.

இதை இஸ்லாமியர்கள் மிகவும் கண்ணியத்துடனும், மரியாதையுடனும், புண்ணியம் கருதியும் ஓதி வருகின்றனர்.
உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உன்னத நினைவை உயிர்பிப்பது என்பது, மவ்லிது ஓதுவதால் ஏற்படும் பயன்களில் ஒன்றாகும். அதேபோல் இறைநேசர்களின் மௌலிதும் பயனள்ளதாகும். இறைநேசர்களைப் பற்றி நினைவு கூறுமிடங்களில் அல்லாஹ்வின் ரஹ்மத் இறங்குகிறது என்று ஜுனைதுல் பகுதாதி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் கண்மணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குர்ஆனில் இறைவன் பல்வேறு இடங்களில் புகழ்ந்து பேசுகிறான்.

ﻭَﺇِﻧَّﻚَ ﻟَﻌَﻠَﻰٰ ﺧُﻠُﻖٍ ﻋَﻈِﻴﻢٍ
(நபியே) நிச்சயமாக நீங்கள் மேலான நற்குணத்தில் இருக்கிறீர்கள். (68:4)
ﻭَﺭَﻓَﻌْﻨَﺎ ﻟَﻚَ ﺫِﻛْﺮَﻙَ

(நபியே) உங்கள் கீர்த்தியை நாம் உயர்த்தியுள்ளோம். (94:4)
ﻭَﻣَﺎ ﺃَﺭْﺳَﻠْﻨَﺎﻙَ ﺇِﻟَّﺎ ﺭَﺣْﻤَﺔً ﻟِّﻠْﻌَﺎﻟَﻤِﻴﻦَ

(நபியே) அகிலத்தாருக்கு அருட்கொடையாகவே உங்களை நாம் அனுப்பியுள்ளோம். (21:107)
அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்
ﻭَﻓِﻴْﻨَﺎ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪِ ﻳَﺘْﻠُﻮْﺍ ﻛِﺘَﺎﺑَﻪُ
ﺍِﺫَﺍ ﺍﻧْﺸَﻖَ ﻣَﻌْﺮُﻭْﻑٌ ﻣِﻦَ ﺍﻟْﻔَﺠْﺮِ ﺳَﺎﻃِﻊٌ
ﺍَﺭَﺍﻧَﺎ ﺍﻟْﻬُﺪَﻯ ﺑَﻌْﺪَ ﺍﻟْﻌَﻤﻰ ﻓَﻘُﻠُﻮْﺑُﻨَﺎ
ﺑِﻪِ ﻣُﻮْﻗِﻨَﺎﺕٌ ﺍَﻥَّ ﻣَﺎﻗَﺎﻝَ ﻭَﺍﻗِﻊِ
ﻳَﺒِﻴْﺖُ ﻳُﺠَﺎﻓِﻲْ ﺟَﻨْﺒُﻪُ ﻋَﻦْ ﻓِﺮَﺍﺷِﻪِ
ﺍِﺫَﺍ ﺍﺳْﺘَﺜْﻘَﻠَﺖْ ﺑِﺎﻟْﻤُﺸْﺮِﻛِﻴْﻦَ ﺍﻟْﻤَﻀَﺎﺟِﻊُ

1. எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப் பொழுது புலரும் நேரத்தில் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்.

2. குருட்டுத் தன்மையில் இருந்த எங்களுக்கு நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன.

3. இரவில் இணைவைப்பாளர்கள் படுக்கையில் ஆழ்ந்து கிடக்கும்போது நபியவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.
அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 1087.

ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

ﻫَﺠَﻮْﺕَ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﻓَﺎَﺟَﺒْﺖَ ﻋَﻨْﻪُ
ﻭَﻋِﻨْﺪَ ﺍﻟﻠﻪِ ﻓِﻲْ ﺫَﺍﻙَ ﺍﻟْﺠَﺰَﺍﺀُ
ﻫَﺠَﻮْﺕَ ﻣُﺤَﻤَّﺪًﺍ ﺑَﺮًّﺍ ﺣَﻨِﻴْﻔًﺎ
ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪِ ﺷَﻴْﻤَﺘُﻪُ ﺍﻟْﻮَﻓَﺎﺀُ
ﻭَﻗَﺎﻝَ ﺍﻟﻠﻪ ﻗَﺪْ ﺍَﺭْﺳَﻠْﺖُ ﻋَﺒﺪًﺍ
ﻳَﻘُﻮْﻝُ ﺍﻟْﺤَﻖَّ ﻟَﻴْﺲَ ﺑِﻪِ ﺧَﻔَﺎﺀُ

1. (இறை மறுப்பாளர்களே) முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் குறைவுபடுத்தி நீங்கள் கவி பாடுகிறீர்கள். அதற்குப் பதிலாக அவர்களை நான் புகழ்ந்து பாடுவேன். அதற்குரிய நற்கூலி இறைவனிடம் உண்டு.

2. நல்லவராகவும் நேரிய வழியில் உள்ளவராகவும் இருக்கிற நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை குறைவுபடுத்திப் பேசுகிறீர்கள். வாக்குறுதியை நிறைவேற்றுவது அவர்களின் அழகிய குணமாகும்.

3. அவர்கள் விஷயத்தில் இறைவன் கூறினான், சத்தியத்தைக் கூறுகிற ஓர் அடியாரை திருத்தூதராக அனுப்பியுள்ளேன். அதில் ஒளிவு மறைவு இல்லை.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல்: முஸ்லிம் 4545

கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்,

ﻭَﺍﻟْﻌَﻔْﻮَ ﻋِﻨْﺪَ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪِ ﻣَﺄْﻣُﻮْﻝُ
ﻓَﻘَﺪْ ﺍَﺗَﻴْﺖُ ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪِ ﻣُﻌْﺘَﺬَﺭَﺍ
ﻭَﺍﻟْﻌَﺬْﺭُ ﻋِﻨْﺪَ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪِ ﻣَﻘْﺒُﻮْﻝُ
ﺍِﻥَّ ﺍﻟﺮَّﺳُﻮْﻝَ ﻟَﻨُﻮْﺭٌ ﻳُﺴْﺘَﻀَﺎﺀُ ﺑِﻪِ
ﻭَﺻَﺎﺭِﻡٌ ﻣِﻦْ ﺳُﻴُﻮْﻑِ ﺍﻟﻠﻪِ ﻣَﺴْﺌُﻮْﻝٌ
1. நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்கள் என எனக்குத் தெரிவிக்கப்பட்டது. மன்னிப்பு என்பது இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.

2. மன்னிப்புத் தேடியவனாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் வந்தேன். அம்மன்னிப்பு இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒப்புக் கொள்ளப்பட்டது.

3. நிச்சயமாக முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒளி கொடுக்கும் பேரொளியாகவும், இறைவனின் வாட்களில் உருவிய வாளாகவும் இருக்கிறார்கள்.
அறிவிப்பாளர்: ஆஸிம் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6558

ﺇِﻥَّ ﺍﻟﻠَّﻪَ ﻭَﻣَﻠَﺎﺋِﻜَﺘَﻪُ ﻳُﺼَﻠُّﻮﻥَ ﻋَﻠَﻰ ﺍﻟﻨَّﺒِﻲِّ ۚ ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍ ﺻَﻠُّﻮﺍ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠِّﻤُﻮﺍ ﺗَﺴْﻠِﻴﻤًﺎ
நிச்சயமாக இறைவனும் அவனுடைய மலக்குகளும் நபி மீது ஸலவாத் சொல்கிறார்கள். ஈமான் கொண்டவர்களே! அந்த நபி மீது நீங்களும் ஸலவாத் சொல்லுங்கள் சலாமும் கூறுங்கள்.
(அல்குர்ஆன் 33:56)

இதற்கு விரிவுரை சொல்லும் போது இமாம் அபுல் முஆலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 'அல்லாஹ் ஸலவாத் கூறுகிறான் என்றால் திருநபியை அமரர்களிடம் போற்றிப் புகழ்கிறான் என்பதே பொருள் என்று கூறுகிறார்கள். -ஸஹீஹுல் புகாரி 2:77

இமாம் இப்னு கதீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், அல்லாஹ் இப்பூவுலகவாசிகளோடு திருநபி மீது ஸலவாத் உரைக்க கட்டளையிட்டதன் நோக்கம், அவ்விண்ணிலும் இம்மண்ணிலும் திருநபியின் புகழ் முழங்கப்பட வேண்டும் என்பதற்கே என்கிறார்கள். -இப்னு கதீர் 3:533

மவ்லிதுகளில் கூறப்படும் ஸலவாத்துகள் இந்த இறைக் கட்டளையை நிறைவேற்றிய பலனைத் தருகிறது.

அதேபோல் இங்கு கூறப்படும் சலாமும், புகழ்ச்சிகளும் நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு உடனே எத்திவைக்கப்படுகிறது.

ﻋَﻦْ ﺍِﺑْﻦِ ﻣَﺴْﻌُﻮْﺩ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪِ ﺻَﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭ ﺳﻠﻢ ﺍِﻥَّ ﻟﻠﻪ ﻣَﻠَﺎ ﺋِﻜَﺔ ً ﺳَﻴَّﺎ ﺣِﻴْﻦَ ﻓِﻲَ ﺍَﻟَﺎ ﺭْﺽٍ ﻳَﺒَﻠِّﻐُﻮْﻧَﻲ ﻣِﻦْ ﺍﻣَّﺘَﻰ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்விற்கு மண்ணுலகில் சுற்றிவரும் மலக்குகள் இருக்கிறார்கள். என் உம்மத்தினர் கூறும் சலாமை அவர்கள் என்னிடம் தெரிவிக்கிறார்கள்.

அறிவிப்பாளர்: இப்னு மஸ்வூத் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: நசாயீ 1265

ஹஸ்ஸான் இப்னு தாபித் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அறிவிப்புப்படி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து பாடினால் அதற்கு அல்லாஹ்விடம் கூலியும் கிடைக்கிறது.

இறைநேசர்களின் பேரில் மௌலிது ஓதுவது:

அருள்மறையாம் திருக்குர்ஆனும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன்மொழிகளும் இறைநேசர்கள் பெயரில் மௌலிது ஓதுவதற்கு சான்றாக அமைந்துள்ளன.

அல்குர்ஆன்:

இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறு, மாண்புகள் மற்றும் அற்புதங்களைக் கூறுபவைகளாகவே மௌலிதுகள் அமைந்துள்ளன. இதற்கு குர்ஆனில் காணப்படும் ஆதாரங்கள்:

1. மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 3:35-47, 1:16-29)

2. இஸ்கந்தர் துல்கர்ணைன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல் குர்ஆன் 18:83-98)

3. ஹிழ்ரு அலைஹிஸ்ஸலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 18:65-82)

4. அஸ்ஹாபுல் கஃப் வாழ்க்கை வரலாறு (அல்குர்ஆன் 1:9-25)

ﺃَﻟَﺎ ﺇِﻥَّ ﺃَﻭْﻟِﻴَﺎﺀَ ﺍﻟﻠَّﻪِ ﻟَﺎ ﺧَﻮْﻑٌ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻭَﻟَﺎ ﻫُﻢْ ﻳَﺤْﺰَﻧُﻮﻥَ
கவனமாகக் கேளுங்கள்! திண்ணமாக அல்லாஹ்வின் நேசர்களுக்கு எப்பயமும் இல்லை. அவர்கள் கவலை சொள்ளவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 10:62)

திண்ணமாக, எங்கள் இறைவன் அல்லாஹ்வே எனக் கூறி பிறகு (அதிலே) நிலைத்திருந்தவர்களுக்கு எந்த பயமும் இல்லை. அவர்கள் கவலை கொள்ளவும் மாட்டார்கள்.

ﺇِﻥَّ ﺍﻟَّﺬِﻳﻦَ ﻗَﺎﻟُﻮﺍ ﺭَﺑُّﻨَﺎ ﺍﻟﻠَّﻪُ ﺛُﻢَّ ﺍﺳْﺘَﻘَﺎﻣُﻮﺍ ﻓَﻠَﺎ ﺧَﻮْﻑٌ ﻋَﻠَﻴْﻬِﻢْ ﻭَﻟَﺎ ﻫُﻢْ ﻳَﺤْﺰَﻧُﻮﻥَ ﺃُﻭﻟَٰﺌِﻚَ ﺃَﺻْﺤَﺎﺏُ ﺍﻟْﺠَﻨَّﺔِ ﺧَﺎﻟِﺪِﻳﻦَ ﻓِﻴﻬَﺎ ﺟَﺰَﺍﺀً ﺑِﻤَﺎ ﻛَﺎﻧُﻮﺍ ﻳَﻌْﻤَﻠُﻮﻥَ
அத்தகையவர்களே சுவர்க்கவாதிகள். அவர்கள் செய்தவற்றிற்கு நற்கூலியாக அதிலே அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 46:13,14)

பருவமில்லாத (ருn-ளுநயளழn) காலத்திலும் மர்யம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கிடைத்த கனிவர்க்கங்கள் பற்றியும், (அல்குர்ஆன் 3:37)

சுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அவையிலிருந்த ஞானம் பெற்ற ஓர் இறைநேசர் பன்னூற்றுக் கணக்கான மைல்களுக்கு அப்பாலிருந்த பல்கீஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சிம்மாசனத்தை கண்ணிமைக்கும் நேரத்தில் கொண்டு வந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 27:38-40)
முன்னூறு வருடங்களுக்கு மேலாக உறங்கிய குகைத் தோழர்களுக்கு நிகழ்ந்த அற்புதம் பற்றியும் (அல்குர்ஆன் 18:9-25)
அல்குர்ஆன் இனிதாக எடுத்தியம்புகிறது. இதேபோல்தான் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாறுகள், அற்புதங்கள் மௌலிதுகளில் கூறப்பட்டுள்ளன.

ஹதீதுகள் :

ﻋَﻦِ ﺍﺑْﻦُ ﻋُﻤَﺮَ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪ ﺻَﻠَّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﺍُﺫْﻛُﺮُﻭْﺍ ﻣَﺤَﺎﺳِﻦَ ﻣَﻮْﺗَﺎﻛُﻢْ .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், உங்களில் முன் சென்றோர்களின் நல்லவைகளை எடுத்துக் கூறுங்கள்.

அறிவிப்பாளர்: இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு, நூல்கள்: திர்மிதி 940, அபூதாவூத் எண் 4254.

ﻋَﻦْ ﺍَﻧَﺲِ ﺑْﻦِ ﻣَﺎﻟِﻚِ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﻣَﺮُّﻭْﺍ ﺑِﺤَﻨَﺎﺯَﺓَ ﻓَﺎَﺛْﻨَﻮْﺍ ﻋَﻠَﻴْﻬَﺎ ﺧَﻴْﺮًﺍ ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُ ﺻَﻠّﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓَﻘَﺎﻝَ ﻋُﻤَﺮُﺑْﻦُ ﺍﻟْﺨَﻄَّﺎﺏِ ﻣَﺎ ﻭَﺟَﺒَﺖْ ﻗَﺎﻝَ ﻫَﺪَﺍ ﺍَﺛْﻨَﻴْﺘُﻢْ ﻋَﻠَﻴْﻪ ﺧَﻴْﺮًﺍ ﻓَﻮَﺟَﺒَﺖْ ﻟَﻪُ ﺍﻟْﺠَﻨَّﺔُ
ஜனாஸாவைக் கடந்து சென்ற (அருமைத் தோழர்கள்) புகழ்ந்து பேசினார்கள். இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கடமையாகிவிட்டது என்று கூறினார்கள். எது கடமையானது என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வினவியபோது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலுரைத்தார்கள், இறந்து போன இம்மனிதரை நீங்கள் புகழ்ந்துரைத்தீர்கள். எனவே அவருக்கு சொர்க்கம் கடமையாகிவிட்டது.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு நூல்கள்: புகாரி 1278, முஸ்லிம் 1578.

பத்ரு மௌலிது:

ﻋَﻦِ ﺍﻟﺮَّﺑِﻴْﻊِ ﺑِﻨْﺖِ ﻣَﻌُﻮْﺫِ ﻗَﺎﻟَﺖْ ﺩَﺧَﻞَ ﻋَﻠﻰَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻏَﺪَﺍﺓَ ﺑُﻨِﻲَ ﻋَﻠَﻲّ ﻭَﺟُﻮَﻳْﺮِﻳَّﺎﺕٌ ﻳَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺎﻟﺪَّﻑ ﻳَﻨْﺪُﺑْﻦَ ﻣَﻦْ ﻗُﺘِﻞَ ﻣِﻦْ ﺁﺑَﺎﺋِﻬِﻦَّ
எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் சிறுமிகள் பத்ர் யுத்தத்தில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிருந்தார்கள்.
அறிவிப்பாளர்: ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 3700, திர்மிதி 1010, 4276.

முஹாஜிர்-அன்ஸார் மௌலிது:

ﺍَﻟﻠﻬُﻢَّ ﺍِﻥِّ ﺍﻟْﻌَِﻴْﺶَ ﻋَﻴْﺶُ ﺍﻵﺧِﺮَﺓِ
ﻓَﺎﻏْﻔِﺮْ ﻟِﻠَﺎﻧْﺼَﺎﺭِ ﻭَﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮَﺓ
ﺍَﻟﻠّٰﻬُﻢَّ ﺍِﻧَّﻪُ ﻻَ ﺧَﻴْﺮَ ﺍِﻻَّ ﺧَﻴْﺮُ ﺍﻵﺧِﺮَﺓ
ﻓَﺒَﺎﺭِﻙْ ﻓِﻲ ﺍﻻَﻧْﺼَﺎﺭِ ﻭَﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮَﺓِ
ﺍَﻟﻠﻬُﻢَّ ﻻَ ﻋَﻴْﺶَ ﺍِﻻَّ ﻋَﻴْﺶُ ﻵﺧِﺮَﺓِ
ﻓَﺎَﻛْﺮِﻡِ ﻓِﻲ ﺍﻻَﻧْﺼَﺎﺭِ ﻭَﺍﻟْﻤُﻬﺎَﺟِﺮَﺓِ
ﺍَﻟﻠﻬُﻢَّ ﺍِﻥَّ ﺍﻻَﺟْﺮَ ﺍَﺟْﺮُ ﺍﻵﺧِﺮَﺓِ
ﻓَﺎﺭْﺣَﻢِ ﺍﻻَﻧْﺼﺎﺭَ ﻭَﺍﻟْﻤُﻬَﺎﺟِﺮَﺓِ
இறைத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிரார்த்தனை செய்து கவி படித்தார்கள்.
திண்ணமாக வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக!
நிச்சயமாக மறுமை நலனைத் தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக!
உறுதியாக மறுமை வாழ்வைத் தவிர வேறு எந்த வாழ்வும் இல்லை. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை கண்ணியப்படுத்துவாயாக!
திண்ணமாக நற்கூலி என்றாலே மறுமையின் நற்கூலிதான். இறைவனே! அன்ஸார்-முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2622, 2623, 2741, 3616.

ஸித்தீகா மவ்லிது:

ﻋَﻦْ ﻣَﺴْﺮُﻕٍ ﻗَﺎﻝَ ﻗَﺎﻝَ ﺩَﺧَﻠْﻨَﺎ ﻋَﻠﻰ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻭَﻋﻨْﺪَﻫَﺎ ﺧَﺴَّﺎﻥ ﺑﻦ ﺛَﺎﺑِﺖٍ ﻳُﻨْﺸَﺪُﻫَﺎ ﺷِﻌْﺮًﺍ ﻳُﺸَﺒَّﺐُ : ﺑِﺄَﺑْﻴَﺎﺕٍ ﻟَﻪُ ﻭَﻗَﺎﻝَ
ﺧَﺼَّﺎﻥُ ﺭَﺯَﺍﻥٌ ﻣَﺎﺗَﺰَﻥِّ ﺑِﺮِﻳْﺒَﺔ
ﻭَﺗُﺼْﺒِﺢُ ﻏَﺮْﺛِﻯِﻤْﻦ ﻟَﺤُﻮْﻡِ ﺍﻟْﻐَﻮَﺍﻓِﻞِ
நாங்கள் ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை சந்திக்க சென்றோம். அப்போது ஹஸ்ஸான் இப்னு தாபித் ரளியல்லாஹு அன்ஹு தனது கவிகளின் மூலம் அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களை புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். (அவற்றில் ஒன்று)
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா நல்லொழுக்கமும், நுண்ணறிவும் மிக்கவர்கள், ஐயத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எந்தவொரு பெண்ணைப் பற்றியும் தவறாகப் பேச மாட்டார்கள்.

அறிவிப்பாளர்: மஸ்ரூக் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 3831, முஸ்லிம் 4543
மவ்லிது ஓதுவதின் பலன்கள்:
மவ்லிது ஓதக் கூடியவர்களுக்கு மலக்குமார்களைக் கொண்டு பாதுகாப்பு அரண் இறைவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான்.

ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻗَﺎﻟَﺖْ ﻗَﺎﻝَ ﺭَﺳُﻮْﻝُ ﺍﻟﻠﻪ ﺻَﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻟِﺤَﺴَّﺎﻥَ ﺍِﻥَّ ﺭُﻭْﺡَ ﺍﻟْﻘُﺪُﺱِ ﻻَﻳَﺰَﺍﻝُ ﻳُﺆَﻳَّﺪُﻙَ ﻣَﺎﻧَﻔَﺤْﺖَ ﻋَﻦِ ﺍﻟﻠﻪِ ﻭَﺭَﺳُﻮْﻟِﻪِ
இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு கூறினார்கள்,
நீங்கள் இறைவனுக்காகவும் இறைத்தூதருக்காவும் கவிபாடும் காலமெல்லாம் பரிசுத்த ஆன்மா(வான ஜிப்ரயில் அலைஹிஸ்ஸலாம்) உங்களைப் பலப்படுத்திக் கொண்டே இருப்பார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: முஸ்லிம் 4545.

ﻋَﻦ ﺍَﻧَﺲِ ﺑﻦِ ﻣَﺎﻟِﻚٍ ﺍَﻥَّ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣَﺮَّ ﺑِﺒَﻌْﺾِ ﺍﻟْﻤَﺪِﻳْﻨَﺔِ ﻓَﺎَﺫَﺍ ﻫُﻮَ ﺑِﺠَﻮَﺍﺭِ ﻳَﻀْﺮِﺑْﻦَ ﺑِﺪُﻓِّﻬِﻦَّ ﻭَﻳَﺘَﻐَﻨَّﻴْﻦَ ﻭَﻳَﻘَﻠْﻦَ
ﻧَﺤْﻦُ ﺟَﻮَﺍﺭِ ﻣِﻦْ ﺑَﻨِﻲ ﺍﻟﻨَّﺠَّﺎﺭِ
ﻳَﺎﺣَﺒَّﺬَﺍ ﻣُﺤَﻤَّﺪٌﺍ ﻣِﻦْ ﺟَﺎﺭِ
ﻓَﻘَﺎﻝَ ﺍﻟﻨَّﺒِﻲُّ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ﻳَﻌْﻠَﻢُ ﺍﻟﻠﻪ ﺍِﻧِّﻲْ ﻷْﺣُﺒُّﻜُﻦَّ
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவின் ஒரு பகுதிக்குச் சென்றார்கள். அங்கே சில சிறுமிகள் தஃப் அடித்து பாட்டுப் பாடிக் கொண்டிருந்தார்கள். (அவற்றில் ஒன்று) நாங்கள் பனூ நஜ்ஜார் குடும்பத்தைச் சார்ந்த சிறுமிகள். முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறந்த அண்டை வீட்டுக்காரர் ஆவார்கள்.
(இதைக் கேட்ட) நபிகள் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், திண்ணமாக நான் உங்களை நேசிக்கிறேன்.(இதை) அல்லாஹ் அறிகிறான்.
அறிவிப்பாளர்: அனஸ் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: இப்னு மாஜா 1889.

பள்ளிவாசலில் மௌலிது:

ﻋَﻦْ ﺍِﺑْﻦ ﺟَﺪْﻋَﺎﻥَ ﻗَﺎﻝَ ﺍَﻧْﺸَﺪَ ﻛَﻌْﺐُ ﺑْﻦُ ﺯُﻫَﻴْﺮِﺑْﻦِ ﺍَﺑِﻲ ﺳﻠّﻢَ ﺭَﺳُﻮْﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ
கஃப் இப்னு ஜுஹைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பள்ளிவாசலில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் புகழ்ந்து படித்தார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு ஜத்ஆன் ரலியல்லாஹு அன்ஹு
நூல்: ஹாகிம் 6555.

ﻋَﻦْ ﺍَﺑِﻲ ﻫُﺮَﻳْﺮَﺓَ ﺍَﻥَّ ﻋُﻤَﺮَ ﻣَﺮَّ ﺑِﺤَﺴَّﺎﻥَ ﻭَﻫُﻮَ ﻳَﻨْﺸُﺪُ ﺍﻟﺸِّﻌْﺮَ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﻓَﻠَﺤِﻆَ ﺍِﻟَﻴْﻪِ ﻓَﻘَﺎﻝَ ﻗَﺪْ ﻛُﻨْﺖُ ﺍُﻧْﺸِﺪَ ﻭَﻓِﻴْﻪِ ﻣَﻦْ ﻫُﻮَ ﺧَﻴْﺮٌ ﻣِﻨْﻚَ
பள்ளிவாசலில் ஹஸ்ஸான் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் கவி பாடிக் கொண்டிருந்தபோது அங்கு சென்ற உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கடைக்கண் பார்வையால் பார்த்தார்கள். அப்போது ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்,
உங்களை விட சிறந்தவரான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இருந்தபோதே இப்பள்ளிவாசலில் கவி பாடியுள்ளேன்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு
நூல்: புகாரி 2973, முஸ்லிம் 4539.

ﻋَﻦْ ﻋَﺎﺋِﺸَﺔَ ﻗَﺎﻟَﺖْ ﻛَﺎﻥَ ﺭَﺳُﻮْﻝَ ﺍﻟﻠﻪ ﺻَﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋَﻠَﻴْﻪِ ﻭَﺳَﻠَّﻢَ ﻳَﻀَﻊُ ﻟﺤَﺴَّﺎﻥَ ﻣِﻨْﺒَﺮًﺍ ﻓِﻲ ﺍﻟْﻤَﺴْﺠِﺪِ ﻳَﻘُﻮْﻡُ ﻋَﻠَﻴْﻪِ ﻓَﺎِﻧَّﻤَﺎ ﻳُﻔﺎﺧِﺮُ ﻋَﻦْ ﺭَﺳُﻮْﻝِ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ .
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஸ்ஸான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பள்ளிவாசலில் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள்.
அதிலே அவர்கள் ஏறி நின்று முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையேப் புகழ்வார்கள்.
அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா.
நூல்: திர்மிதி 2773.

மவ்லிது ஓதும் அமல் பெருவிழாவானது எப்போது?

மௌலிது ஓதும் அமலை பெரும் விழாக்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக முதலில் ஏற்படுத்தியவர், தலைசிறந்த வள்ளல் தன்மை மிக்க அரசர்களில் ஒருவரான 'அல்மலிக்குல் முழஃப்பர் அபூஸயீது கவ்கப்ரீ பின் ஸைனுத்தீன் அலியிப்னு புக்தகீன்' என்பவர் ஆவார்.
இந்த மன்னர் இனிய பல பொது சேவைகள் செய்தவர் என்று இமாம் சுயூத்தி அவர்கள் கூறியுள்ளார்கள்.

இந்த மன்னர் ரபியுல் அவ்வலில் மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிதிற்கு ஏற்பாடு செய்து, அதில் பங்கேற்க, மாபெரும் கூட்டத்தை திரட்டி வந்தார் என்றும், இந்த மன்னர் வீரமும், வியத்தகு ஞானமும், கொடைத்தன்மையும் கொண்டவர் என்றும் இப்னு கதீர் அவர்கள் எழுதிய வரலாற்று நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இவர் ஏற்பாடு செய்த மௌலிதின் விருந்தில் ஞானிகள் மற்றும் ஸூஃபிகளின் தலைவர்களும் பங்கேற்றனர். அவர்களுக்கெல்லாம் மன்னர் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். அன்பளிப்புகளும் வழங்கினார். ஆண்டு தோறும் மூன்று இலட்சம் ரூபாயை மன்னர் முழஃப்பர் இந்த மௌலிதிற்காக செலவிட்டார்.
புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களில் அல்ஹாபிழ் இப்னு ஜவ்ஸி, இப்னுல் இமாதுல் ஹன்பலிய்யீ, இமாம் ஸர்கானீ, இப்னு கல்கான், அல்ஹாபிழ் இப்னு கதீர் போன்றோர் இந்த மன்னரின் வரலாற்றையும், அவர் மவ்லிது மஜ்லிஸ் நடத்திய தனிச்சிறப்பையும் புகழ்ந்து கூறியுள்ளார்கள்.

மௌலிதுகள் பற்றி மார்க்க அறிஞர்கள் கூற்று:

வஹ்ஹாபிகளின் கருத்துக்களுக்கு முன்வடிவம் கொடுத்த இப்னு தைமிய்யா கூட தமது 'இக்திளா' நூல் 2:136 ல் கூறுகிறார், 'திருநபியின் மௌலிது நடத்துவதால் மகத்தான நற்கூலி கிடைக்கும்' என்று.

எனக்கு உஹது மலை அளவு தங்கம் இருந்தால் அவையனைத்தையும் அருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது மவுலிது ஷரீபை நடத்துவதற்காக செலவு செய்வதையே நான் பெரிதும் விரும்புவேன் என்று ஹஜ்ரத் ஹஸன் பஸரீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஸெய்யிதுத் தாயிபா -ஸூபியாக்களின் சக்கரவர்த்தி ஹஜ்ரத் ஜுனைதுல் பக்தாதி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் 'எவர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மவ்லிது ஷரீபுக்கு ஆஜராகி அதை மகிமைப் படுத்தி சிறப்புறச் செய்தாரோ நிச்சயமாக அவர் காமிலியத்தான –சம்பூரணமான-ஈமானைப் பெற்றுக் கொண்டவராவார்' என்று.

ஆதார நூற்கள்: தர்ஜுமத்து இக்தில் ஜவ்ஹர் பீ மவுலிதிந் நபிய்யில் அஸ்ஹர், பர்ஸன்ஜீயின் ஷரஹு.
பர்ஸன்ஜீ மவுலிதை அரபுத் தமிழில் மொழி பெயர்த்துள்ள மர்ஹும் அல்ஹாஜ் அபூபக்கர் மிஸ்கீன் சாகிபு ஆலிம் பாஸி (காயல்பட்டணம் ஜாவியா கலீபா வ முதர்ரிஸ்) அவர்களும் அந்நூலில் மேற் சொன்ன ஆதாரங்களை எடுத்துக் கூறியுள்ளார்கள்.

எந்த இடத்தில் எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிது ஓதப்படுகிறதோ, அந்த இடத்தை ஒருவர் நாடினால், நிச்சயமாக அவர், சுவனப் பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். ஏனெனில், ஏந்தல் நபி நாயகம் அவர்கள் மீது கொண்ட அன்பினாலேயே தவிர அவ்விடத்தை அவர் நாடியிருக்கவில்லை.

என்னையொருவர் நேசித்தால் அவர், என்னுடனேயே சுவர்க்கத்தில் இருப்பார் என்பது நபி மொழியாகும் என்று மாமேதை அஷ்ஷெய்கு ஸரியுஸ் ஸிக்திய்யி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.

மவ்லிது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும், நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியாக நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மௌலிதின் தனித்தன்மையைச் சார்ந்தது என்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருப்பதாக இமாம் கஸ்தலானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறந்த புனித இடத்தை மக்காவாசிகள் அன்றும் இன்றும் தரிசிக்கும் அமல், ரபியுல் அவ்வல் 12 ம் நாள் நடைபெற்று வந்ததாக மவாஹிபுல் லதுன்னியா என்ற நூல் கூறுகிறது.
முந்தைய பிந்தைய மார்;க்க மேதைகள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த நாள் இரவிலும் பகலிலும் மவ்லிது எனும் அமலில் ஈடுபடுவதில் ஒத்திருந்தார்கள் என்று அஷ்ஷெய்க் யூசுபுன்னபஹானி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியுள்ளார்கள்.
எந்த ஒரு வீட்டிலோ,

பள்ளிவாசலிலோ மஹல்லாவிலோ மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மௌலிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களை கருணையினால் அல்லாஹ் சூழ வைத்து விடுகிறான் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தமது அல்வஸாயில் ஃபீ ஷறஹிஷ் ஷமாயில் என்ற கிதாபில் கூறியுள்ளார்கள்.

இது போன்ற எண்ணற்ற அறிஞர்களும், மார்க்க மேதைகளும் மவ்லிது ஓதுவதை புனிதமான அமல் என்றும் அதற்காக ஈடுபடுவது அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்றுத் தரக் கூடியது என்றும் சொல்லியிருப்பதால், மௌலிது என்னும் புனித அமலை நாம் சிறப்புற செய்து அல்லாஹ்வின் ரஹ்மத்தை பெறுவோமாக!