இமாமுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டு!
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
இமாமுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வஸீலாவை மறுத்தார்களா?
கலீபதுல் காதிரி, மௌலவி. பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் மாற்றமாக எந்தவொரு இமாமும் கருத்துக் கூறியிருந்தாலும் அதனை எறிந்து விடுங்கள் என்றும்,
நாங்கள் இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநிறுத்த வந்திருக்கின்றோம் என்றும் கூறிக்கொண்டு உலா வருகின்றனர் சில சந்தர்ப்பவாதிகள்.
மத்ஹபுகள் வேண்டாம், இமாம்களே எங்களை பின்பற்ற வேண்டாம் என்று கூறியுள்ளனர் என பொய்யுரைகளை மெய்யுரைகளாய் அவிழ்த்துவிட்டு வருகின்றனர். இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வஸீலா தேடுவதை வெறுத்துள்ளனர் என இமாமுல் அஃலம் அவர்கள் மீது அபாண்டப் பழி சுமத்துகின்ற இந்த அறிஞர்கள் (?)
பிக்ஹ் நூற்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்று ஒதுக்கித் தள்ளுகின்ற இந்த ஆராய்ச்சியாளர்கள்? தங்களது கருத்துகளுக்கு இசைவாக ஏதாவது அதே பிக்ஹ் நூற்களில் தட்டுப்பட்டால் அதை எடுத்துத் தலையில் வைத்து கூத்தாடவும் தவறுவதில்லை.
(அபூஹனீபா) இமாமுடைய நூலையும், அவர்களின் மாணவர்களின் நூலையும் பாட நூலாக ஆக்காத மர்மம் என்ன? உங்கள் இஷ்டத்திற்கு சட்ட விளக்கம் தர இன்று பாடத்தி்ட்டத்தில் இருக்கும் நூல்கள்தான் இடம் தருகின்றன என்பதைத் தவிர வேறு என்ன காரணமிருக்க முடியும்? (நஜாத் நவம்பர் 1986) என்று கேட்கிறவர்கள்,
இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வஸீலா தேடக் கூடாது என்று கூறியதாக அவர்களது நூற்களிலிருந்து ஆதாரம் காட்டாமல்,
மொகலாய மன்னர்களைத் திருப்திப்படுத்துவதற்காக எழுதப்பட்டது என்று விமர்சனம் செய்கின்ற பதாவா ஆலம் கீரியையும், துர்ருல் முக்தாரையும், குதூரியையும்,
இஹ்யாவின் விரிவுரை நூலான இத்திஹாபையும் ஆதாரம் காட்டுவது ஏன்?
அவர்கள் (ஆதாரமாக) காட்டிய நூற்கள் அனைத்தும் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு 1000 ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்டவை. நாம் காட்டியது குர்ஆன், ஹதீஸ் மற்றும் 1000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட நூற்கள் (முனாழரா, பாகம் - 01,
பக்கம் - 56) என்று சவடாலடித்து விட்டு ஹிஜ்ரி 428இல் எழுதப்பட்ட குதூரியையும், ஹிஜ்ரி 1118இல் எழுதப்பட்ட ஆலம் கீரியையும்,
ஹிஜ்ரி 1071இல் எழுதப்பட்ட ரத்துல் முக்தாரையும், இஹ்யா உலூமுத்தீனுக்கு ஹிஜ்ரி 1200இல் எழுதப்பட்ட விரிவுரையான இத்திஹாபையும் அபுல் ஹஸன் அலி நத்வி(இப்பொழுது இவர்கள் மரணித்து விட்டார்கள்) அவர்களுடைய தாரீகேதஃவத் எனும் நூலையும் தமக்கு ஆதாரமாகக் காட்டுவது ஏன்? இது இரட்டை வேடமில்லையா?
படைப்புகளில் மிக்க கண்ணியம் பொருந்திய நாயகமே! படைப்பினங்களின் பொக்கிஷப் பெட்டகமே! தங்களின் கொடையினைக் கொண்டு அடியேனுக்கு சன்மானம் அளிப்பீர்களாக. நான் தங்களின் அருட்கொடையின்பால் மிக்க பேராசை கொண்டுள்ளேன்! நாயகமே தங்களைத் தவிர அபூஹனீபாவுக்கு வேறு யாருமில்லை. (ஹஸீதத்துன் நுஃமானிய்யா, பக்கம் - 65) என்று பாடிப் பரவசமுறுகி்ன்ற இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் வஸீலா தேடுவதை வெறுத்தனர் என, அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கிலே அமுதமும் கொண்டு திரியும் இவர்களது வாதத்தை ஆராய்வோம்.
"மேலும், இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவர்களாகிய இமாம் அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, இமாம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இருவரும் அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வைக் கொண்டுதான் கேட்க வேண்டும். இன்னொருவர் பொருட்டால் கேட்பதை வெறுத்திருக்கிறார்கள் என்று இஹ்யாவின் விரிவுரையில் சொல்லப்பட்டிருக்கிறது" (நஜாத் ஜனவரி, பெப்ரவரி 1987, முனாழரா,
பாகம் - 01, பக்கம் 22,23) என்று நஜாத் ஆசிரியர் வால் பிடித்துக்கொண்டு தொங்குகிறார். உண்மையில் இஹ்யாவின் விரிவுரை இத்திஹாப் சொல்வது என்ன?
அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், அவர்களது இரு மாணவர்களும் ஒரு மனிதன் இன்னாரின் ஹக்கைக் கொண்டும்,
நபிமார்கள் ரஸுல்மார்களின் ஹக்கைக் கொண்டும், பைத்துல் ஹறாம், மஷ்அருல் ஹறாம் ஆகியவற்றின் ஹக்கைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன் என்று பிரார்த்திப்பதை வெறுத்துள்ளனர். காரணம் அல்லாஹ் மீது எவருக்கும் எவ்வித ஹக்கும் கிடையாது. அவ்வாறே துஆ கேட்கின்ற ஒருவர் உனது அர்ஷின் கண்ணியத்தின் பொருட்டைக் கொண்டு பிரார்த்திப்பதையும் வெறுத்துள்ளனர்.
பின்னர் அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு இவ்விடயத்தில் ஹதீஸ் கிடைத்திருப்பதால் அவ்வாறு துஆ கேட்பதை அனுமதித்துள்ளனர். "நாயனே! உன்னிடம் கேட்போரின் ஹக்கைக் கொண்டு கேட்கிறேன். உன்னளவில் நடக்கும் நடையின் ஹக்கைக் கொண்டு கேட்கிறேன் என்று பிரார்த்தனை புரிவதில் ஹதீஸ் ஒன்று வந்துள்ளது.
"ஹக்கு" என்ற பதத்திற்கு ஹுர்மத் - பொருட்டு, அல்லது விதிக்கப்பட்டு ரஹ்மத்தைக் கொண்டு அல்லாஹ் கொடுத்த வாக்கு என்பது பொருள்.
இஹ்யா உலூமித்தீனின் விரிவுரை இத்திஹாபுஸ் ஸஆதா,
பாகம் - 02, பக்கம் - 285
அறிவுக்கடலாம் இமாமுனா கஸ்ஸாலி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதியுள்ள பேரறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப் பெறுகின்ற அற்புதமான நூலான இஹ்யா உலூமித்தீனுடைய விரிவுரையான "இத்திஹாப்" இவ்வளவு தெளிவாகக் கூறி இருக்கிற விஷயத்தில் உண்மைகளை மறைத்துவிட்டு நஜாத் கோஷ்டி தம் பொய் வாதத்துக்குத் தேவையான பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு தில்லுமுல்லுகள் புரிந்துள்ளது.
அடுத்த வரியிலேயே "ஆகும் அப்படிக் கேட்கலாம்"என்று கூறி இருப்பதை ஒரேயடியாக மறைத்துவிட்டு அவலை நினைத்து உரலை இடிக்கிறார்கள். "அற்ப அறிவு அல்லாற்கிடம்" என்பதை நிரூபிக்கின்றார்கள்.
இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும், அவர்களுடைய மாணவர்களான இமாம் யூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, இமாம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகியோரும் அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வைக் கொண்டுதான் கேட்க வேண்டும். இன்னொருவர் பொருட்டால் கேட்பதை வெறுத்திருக்கிறார்கள் என்று கூறுகின்ற நஜாத் ஆசிரியர் தமக்கு ஆதாரமாக இத்திஹாப் எனும் நூலைக் குறிப்பிட்டிருந்தார். இத்திஹாபின் விளக்கத்தில் அவர் புரிந்துள்ள கையாடலை மேல் உள்ளவாறு விளக்கினோம்.
அடுத்து தமது வாதத்திற்கு பதாவா ஆலம்கீரி (பதாவா ஹிந்திய்யா)யையும் துணைக்கிழுத்துள்ளார். "வஅக்ரஹு அன்யகூலபிஹக்கி புலான் அவ் பிஹக்கி அன்பியாயிக,
வரஸூலிக பிஹக்கில் பைத்தில் ஹறாம் வல் மஸ்ஜிதில் ஹறாம் - நான் இன்னாருடைய பொருட்டால்,
உண்மை நபிமார்களின் பொருட்டால் அல்லது தூதர்களின் பொருட்டால் அல்லது கஃபத்துல்லாஹ்வின் பொருட்டால் கேட்கின்றேன் என்று ஒருவன் கூறுவதை நான் வெறுக்கின்றேன்" என்று அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்னதாக இமாம் குதூரி அவர்கள் தனது நூலில் எழுதி இருப்பதை பதாவா ஹிந்திய்யாவில் குறிப்பிடுகின்றார்கள் (முனாழரா, பாகம் - 01, பக்கம் - 22) என்று நஜாத் ஆசிரியர் (திருவாளர்
P.J.செய்னுலாப்தீன்) கூறுகிறார்.
ஆனால், பதாவா ஹிந்திய்யாவில் அவர் குறிப்பிடுவது போன்ற வாசகங்கள் இல்லை. வ அக்ரஹு - நான் வெறுக்கிறேன் என்ற வார்த்தையும் காணப்படவில்லை,
பதாவா ஹிந்திய்யாவில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
"வயுக்ரஹு அன்யகூல பிது ஆஇஹி பிஹக்கி பலான வகதா பிஹக்கி அன்பியாயிக, வ அவ்லியாயிக, அவ் பிஹக்கி ருஸூலிக அவ் பிஹக்கில் பைத்தி அவில்மஷ் அரில் ஹராம்லி அன்னஹு லாஹக்க லில்மக்லூகி அலல் லாஹித் தஆலா கதா பித் தப்யீன" (பதாவா ஹிந்திய்யா, பாகம் - 03, பக்கம் - 352)
நஜாத் ஆசிரியர் கூறுவது போன்ற பொருளையே இது கொண்டிருந்தாலும் கூட,
"இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொன்னதாக இமாம் குதூரி அவர்கள் தனது நூலில் எழுதி இருப்பதை பதாவா ஹிந்திய்யாவில் குறிப்பிடுகிறார்கள்" எனச் சொல்கிறார் நஜாத் ஆசிரியர். ஆனால் பதாவா ஹிந்திய்யாவில் தப்யீன் என்ற நூலில் இருப்பதாக காணப்படுகின்றது. ஆக நஜாத் ஆசிரியர் பதாவா ஹிந்திய்யாவையும் பார்க்கவில்லை. குதூரியையும் பார்க்கவில்லை. யாரோ சொன்னதைக் கேட்டு கதை அளந்திருக்கிறார்.
பதாவா ஹிந்திய்யாவின் அதே பாகம், அதே பக்கத்தில்தான் "இறைவா! உனது அர்ஷின் கண்ணியமான இருப்பிடத்தைக் கொண்டு கேட்கிறேன்" என்பதை வெறுத்துள்ளனர்.
ஆயினும், அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், இவ்வாறு கேட்பதை ஆகுமாக்கி வைத்துள்ளனர். சட்டத்துறை வல்லுனர் அபுல்லைஸ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஏனெனில்,
இறைவா! உனது அர்ஷின் கண்ணியமான இருப்பிடத்தைக் கொண்டு உன்னிடம் கேட்கிறேன் என்ற நபிமொழி அவர்களுக்குக் கிடைத்துள்ளது" என்று காணப்படுவது நஜாத்தாரின் கண்களுக்குத் தட்டுப்படவில்லையோ!
ஷரஹ் பிக்ஹுல் அக்பர் 161ம் பக்கத்திலும், ஹிதாயா பாகம் - 04,
பக்கம் - 459ம் பக்கத்திலும் இவ்விஷயம் வந்துள்ளது. இரண்டு நூற்களிலும் அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு இவ்விஷயத்தில் ஹதீஸ்கள் கிடைத்துள்ளதால் "பொருட்டைக் கொண்டு கேட்பது கூடும்" என்ற அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களது கருத்தையும் இணைத்தே தரப்பட்டுள்ளது. ஆனால், நஜாத் ஆசிரியர் தமக்குச் சாதகமான ஒரு பகுதியைக் கூறிவிட்டு, மறுபகுதியை மறைத்து சித்து விளையாட்டில் இறங்கியுள்ளார்.
இமாமுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹக்கைக் கொண்டு கேட்பது கூடாது என்று கூறுவதற்குக் காரணமென்ன?
படைப்பினங்களுக்கு படைத்தவன் எதையும் செய்ய வேண்டுமென்ற ஹக்கு - கட்டாயம் கிடையாது என்ற கருத்தின் அடிப்படையில் அவ்வாறு கூறினார்கள்.
ஆனால், ஹக்கு என்பதற்கு பொருட்டு என்று அர்த்தம் வைக்கின்றபோது இந்தஆட்சேபனை நீங்கிவிடுகிறது. இதனை மிகத் தெளிவாக ஹதீஸ் கலைமேதை முல்லா அலிகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது ஷரஹ்பிக்ஹுல் அக்பரில் "அபூயூசுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி 'உன்னுடைய அர்ஷின் கண்ணியமான இருப்பிடத்தின் பொருட்டினால் கேட்கிறேன்' என்று கூறுவதை அனுமதித்துள்ளார்கள். அப்படி கேட்கிற விஷயத்தில் அவர்களுக்கு ஹதீஸ்கள் கிடைத்துள்ளன. நான் (முல்லா அலிகாரி) சொல்கின்றேன். "இறைவா! உன்னிடம் கேட்போரின் ஹக்கை - பொருட்டைக் கொண்டு கேட்கிறேன். உன்பால் நடக்கும் நடையின் ஹக்கை - பொருட்டைக் கொண்டு கேட்கிறேன்" என ஹதீஸ் வந்திருக்கிறது. ஹக்கு என்பதற்கு ஹுர்மத் - பொருட்டு, அல்லது விதிக்கப்பட்ட ரஹ்மத்தைக் கொண்டு அல்லாஹ் கொடுத்த வாக்கு என்பதே கருத்து" (ஷரஹ் பிக்ஹுல் அக்பர், பக்கம் - 161) என்று கூறுகின்றார்கள்.
இஹ்யாவின் விரிவுரை நூலான இத்திஹாபுஸ்ஸஆதாவும் ஹக்கு என்பதற்கு அதே கருத்தைத்தான் கூறுகிறது என்பதை மேலே விளக்கி இருந்தோம்.
நஜாத் ஆசிரியர் கூட ஹக் என்பதற்கு பொருட்டு என்ற பொருளைத்தான் கொண்டிருக்கிறார் என்பதை (முனாழரா, பாகம் - 01, பக்கம் - 22) அவரது பேச்சே தெளிவுபடுத்துகின்றது.
ஆக, இமாமுல் அஃலம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹக் என்பதற்கு பொருட்டு என்ற கருத்தினைக் கொண்டிருக்கவில்லை. அதனால்தான் அவர்கள் படைத்தவனுக்கு படைப்பினங்கள் மீது ஹக் இல்லை என்று கூறினார்கள்.
இந்த உண்மைகளை நஜாத் ஆசிரியர் நன்கு தெரிந்திருந்தும் கூட,
உண்மையைத் திரித்துக்கூறி மக்களைக் குழப்புவதிலும்,
இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது அபாண்டமாக பழி சுமத்துவதிலும் ஆர்வம் காட்டுவது ஏன்?
வல்ல அல்லாஹ் குழப்பவாதிகளை இனங்காட்டி சுன்னத் வல் ஜமாஅத் மக்களை வழி தவறாதிருக்கச் செய்யும் பணியாக இருக்கலாம்.
ஒருவரின் அல்லது கண்ணியத்திற்குரிய ஒன்றின் பொருட்டினைக் கொண்டு கேட்கலாம் என்பதற்கும்,
அல்லாஹ்வுக்கு ஹக்கு உண்டு என்பதற்கும் புகாரி ஷரீபிலும்,
திர்மிதியிலும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் காணக்கிடைக்கின்றன.
ஒருவரது பொருட்டைக் கொண்டு கேட்கலாமா? என்பது குறித்து இனி நபிமொழிகளின் ஆதாரத்தில் ஆராய்வோம்!
அது ஹஜ் நேரம். கஃபத்துல்லாஹ்வில், அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும் அவர்களி்ன் தோழர்களும் வீற்றிருக்கின்றனர். அங்கு வந்த மனிதரொருவர், இப்னு உமரிடம் (ரழியல்லாஹு அன்ஹு), உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்து விவரமொன்றினைக் கேட்கின்றபோது கூறுகிறார்,
"இன்னி ஸாயிலுக அன் ஷெய்இன் ஃபஹத்தீஸ்னி அன்ஷுதுக பிஹுர்மதி ஹாதல் பைத்தி. நான் ஒரு விஷயத்தைக் கேட்டால் கூறுவீர்களா? இந்த வீட்டின் ஹுர்மத்தை பொருட்டைக் கொண்டு உங்களிடம் கேட்கி்ன்றேன்..." எனச் சொல்கின்றார்.
நூல் : ஜாமிஉத் திர்மிதி, பாகம் - 02, பக்கம் - 214
அதற்கு இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் "ஆம்! கூறுகின்றேன்" என்று பதில் சொன்னார்களே தவிர, "வீட்டின் கண்ணியத்தைக் கொண்டு கேட்கின்றேன்" எனச் சொல்வது தவறு எனத் தடுக்கவில்லை.
"இவ்வாறு கேட்பது கூடும். காரணம் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அதனை மறுக்கவில்லை".
நூல் : பத்ஹுல் பாரி, பாகம் - 08,
பக்கம் - 366, 367
இதே நபிமொழி புகாரியில் கிதாபுல் மஆஸி (போர்கள் பற்றிய பாடம்)யிலும், உதுமான் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைக் குறித்த வரலாற்றிலும் வருகின்றது.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் வருகைக்கு முன்னர், யஹுதிகள்,
நஸாராக்கள் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பொருட்டைக் கொண்டு உதவி தேடுவதை திருமறை அல்குர்ஆனின் 2 : 89ஆம் வசனம் தெளிவுபடுத்துகின்றது. இவ்வசனத்திற்கு விரிவுரை கூறுமிடத்து இமாம் ஹாகிம் தமது முஸ்தத்ரகில் பின்வருமாறு கூறுகின்றனர்.
"கான யஹூது யகூலூன அல்லாஹும்ம இன்னா நஸ்தன்ஸிருக பிஹக்கில் நபிய்யில் உம்மிய்யி. யூதர்கள், இறைவா! உம்மி நபியின் ஹக் பொருட்டைக்கொண்டு உன்னிடம் உதவி தேடுகின்றோம்" என்று கேட்போராக இருந்தனர். இந்த விபரம் தலாயிலுன் நுபுவ்வத்,
பாகம் - 01, பக்கம் - 19லும் பதிவாகி உள்ளது.
ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தவறிழைத்தபோது "இரட்சகா! முஹம்மதின் பொருட்டினால் கேட்கின்றேன். எனது பாவத்தை மன்னிப்பாயாக!" எனக் கேட்டனர். இந்த விவரம் முஸ்தத்ரக் பாகம் - 02,
பக்கம் - 615லும், முஃஜமுஸ்ஸஈர்,
பக்கம் - 207லும், தாரிக் இப்னு அஸாகிர் பாகம் - 02, பக்கம் - 357லும் ஸர்கானி, பாகம் - 08, பக்கம் - 361லும்,
மவாஹிபுல்லதுன்னிய்யாவில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை ஸயாரத் செய்தல் பற்றிய பாடத்திலும் காணலாம்.
பள்ளிவாசலுக்குச் செல்லும்போது "நாயனே! உன்னிடம் வேண்டுவோரின் ஹக்கைக் கொண்டு கேட்கிறேன்" என பிரார்த்திக்கும்படி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். இந்த நபிமொழி இஹ்யா உலூமித்தீன் பாகம் - 01, பக்கம் - 292லும் அத்காருன்னவவீயிலும் பதிவாகி உள்ளது.
நாம் எடுத்துக் காட்டியுள்ள நபிமொழிகள் மூலம் அல்லாஹ் அல்லாத ஒருவரது ஹக்கைக் கொண்டு வஸீலா தேடலாம் என்பது ஊர்ஜிதமாகின்றது. அத்தோடு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் காலத்தில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டபோது அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை வஸீலாவாக வைத்து மழை தேடினர். (புகாரி)
இந்த ஹதீஸுக்கு விளக்கம் எழுதிய ஹதீஸ் கலை மேதை அல்லாமா இப்னு ஹஜருல் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி தமது பத்ஹுல் பாரி, பாகம் - 04, பக்கம் - 412இல் "அன்ன உமா ரழியல்லாஹு அன்ஹு இஸ்தஸ்கா முதவஸ்ஸிலன் பில் அப்பாஸி - உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களது பொருட்டைக் கொண்டு - வஸீலாவைக் கொண்டு மழை தேடினார்கள்"
அதே நூல் அதே பக்கத்தில் "இத்தகீதூஹு வஸீலதன் இலல்லாஹி - அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அல்லாஹ்வின் பால் வஸீலாவாக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்" என உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாகக் காணக் கிடைக்கின்றது.
சந்தடியற்ற இடத்தில் உங்களில் யாருக்காவது உதவி தேவைப்பட்டால் அல்லாஹ்வி்ன் நல்லடியார்களே எனக்கு உதவுங்கள் எனச் சொல்லுங்கள். அல்லாஹ்வுக்கு சில அடியார்கள் உளர். அவர்களை அவர்கள் (அழைப்பவர்கள்) காண மாட்டார்கள்" இந்த நபிமொழிக்கு வஹ்ஹாபிகளின் தலைவர்களில் ஒருவரான ஷவ்கானி தனது துஹ்பத்துத் தாகிரீன் பககம் - 182இல் அல்லாஹ்வின் நல்லடியார்களில் மனிதனின் கண்ணுக்குப் புலப்படாத மலக்குகள், சாலிஹான ஜின்கள் போன்றோரைக் கொண்டு உதவிதேட இந்த ஹதீதில் ஆதாரமிருக்கிறது. இதில் எவ்வித தவறும் இல்லை" எனக் கூறுகின்றார்.
இதுபோல பல நூறு ஹதீஸ்களை நாம் ஆதாரமாகத் தரமுடியும். மொத்தத்தில் இமாமுல் அஃலம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மீது இல்லாத ஒரு குற்றச்சாட்டைக் கூறி அவர்களின் நோக்கத்தைக் களங்கப்படுத்திவிட முனைவது ஏன்? அவர்களின் விளக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் மக்களை தவறான வழிக்கு அழைத்துச் செல்ல முனைவோரின், மாய வலையில் சிக்கிடாமல் அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத்தின் அழகிய பாதையில் நடைபோட அல்லாஹ் அருள் பாலிப்பானாக!
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
நன்றி - வஸீலா, 15.02.1987,
01.03.1987, 15.03.1987
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
http://majlismuhibburrasool.com/index.php/aqeeda/410-2013-07-23-17-46-22.html
●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●
FORWARD
ALL
SUNNTH JAMATH
💯