Monday, August 29, 2016

மரணித்தவர்களிடம் உதவி தேடுவதை ஷரீஅத் அனுமதிக்கின்றதா?

﷽  -الصــلوة والسلام‎ عليك‎ ‎يارسول‎ الله ﷺ

மரணித்தவர்களிடம் உதவி தேடுவதை ஷரீஅத் அனுமதிக்கின்றதா?

கலீபதுல் காதிரி, மௌலவி பாஸில், ஷெய்கு ஏ.எல்.பதுறுத்தீன் ஸூபி (ஷர்க்கி – பரேலவி) அவர்கள்

இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் மரணித்தவர்களை ஸியாரத் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதற்கு இரண்டு காரணங்களிருந்தன.

1. சிலை வணக்கத்தை ஒத்திருப்பதுபோன்ற அச்சம்

2. ஜாஹிலியாக் காலத்து பழக்க வழக்கத்தில் மீண்டும் சென்று சொல்,
செயலில் குற்றம் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை.

இஸ்லாம் மக்களுக்கு நன்கு அறிமுகமாகி, அதன் சட்ட திட்டங்களும், நோக்கமும் மக்களுக்கு நன்கு உறுதியானதன் பின் மரணித்தவர்களை ஸியாரத் செய்வதற்கிருந்த தடை நீக்கப்பட்டது.

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

"கப்றுகளை ஸியாரத் செய்வதை உங்களுக்கு நான் தடுத்திருந்தேன். இப்போது ஸியாரத் செய்யுங்கள்".
அறிவிப்பவர் : ஹளரத் புறைதா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : அபூதாவூத், பாகம் - 2, பக்கம் - 461

மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிம் ஷரீபில் ஹளரத் புறைதா ரழியல்லாஹு அன்ஹு மூலமும் இப்னு மாஜாவில் ஹளரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு மூலமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்னு மாஜாவின் அறிவிப்பில் சற்று கூடுதலாக பின்வருமாறு அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது.

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் அறிவிக்கின்றார்கள்,

"கப்றுகளை ஸியாரத் செய்வதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். இப்போது ஸியாரத் செய்யுங்கள்! ஸியாரத் செய்தால் உலகில் வெறுப்பு (ஸூஹ்து) ஏற்படும். மறுமையின் நினைவு வரும்.

ஆதாரம் : ஸுனன் இப்னு மாஜா,
பாகம் - 01, பக்கம் - 501, ஹதீஸ் எண் - 1571

பின்வரும் நோக்கங்களுக்காக ஸியாரத் செய்யப்படுகின்றன.

01. மரணத்தையும், மறுமையையும் நினைவுபடுத்துவதற்காக. பொதுவாக கப்றுகளை காண்பதின் மூலமும் இந்த நோக்கத்தை அடைய முடியும். அடங்கியிருப்பவர் யார்?
என்று தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.

02. மையித்திற்கு துஆக் கேட்பதற்காக, அனைத்து முஸ்லிம்களின் கப்றுகளை ஸியாரத் செய்வதன் மூலம் இதனை அடையலாம்.

03. பறக்கத் பெறுவதற்காக
நல்லவர்களை ஸியாரத் செய்வதன் மூலம் இதனைப் பெற முடியும். காரணம் நல்லவர் (நபிமார், வலிமார்)களின் கப்றில் கணக்கற்ற அதிகாரங்களும் பறக்கத்துக்களும் உதவிகளும் தன்னகத்தே கொண்டுள்ளன.

04. கடமையை (ஹக்கை) நிறைவேற்றுவதற்காக நண்பர்கள்,
பெற்றோர்களை ஸியாரத் செய்வதன் மூலம் இதனை நிறைவு செய்யலாம்.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

"வெள்ளிக் கிழமை தனது இரு பெற்றோர்களின், அல்லது இருவரில் ஒருவரின் கப்றை ஸியாரத் செய்யும் ஒருவர் ஒரு ஹஜ்ஜை நிறைவேற்றியவர் போலாவார்". மற்றுமொரு அறிவிப்பி்ல் அவருக்கு நரக விடுதலைக்கான பரிவு (றஹ்மத்) எழுதப்படும்.

றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறினார்கள்,

உலகில் மைய்யித்திற்கு மிக விருப்பமானவர் ஸியாரத் செய்யும்போது கப்றில் இருக்கும் மையித் அவர் வரவால் புத்துணர்வு பெறுகின்றது.

ஆதாரம் : பிஃங்யா, பக்கம் - 97

இமாம் பகுறுத்தீன் றாஸி (வபாத் ஹிஜ்ரி 606) கூறுகின்றார்கள்,

ஸியாரத் செய்ய செல்பவர் கப்றை நெருங்கும்போது அவருக்கும்,
கப்றுக்குமிடையில் விஷேடமான ஒரு தொடர்பு ஏற்படுகின்றது. அவ்வாறே, தரிசிப்பவருக்கும்,
கப்றிலிருப்பவருக்குமிடையிலும் விஷேடமான ஒரு தொடர்பு ஏற்படுகின்றது. இவ்வாறு இருவருக்குமிடையில் இருவிதமான தொடர்புகள் மலர்கின்றன.

1. மானசீக நேர்முகம்

2. விஷேட பிணைப்பு
கப்றிலிருப்பவர் விஷேட ஆற்றல் பெற்றிருப்பின் ஸியாரத் செய்பவர் அதன் மூலம் அதிக பயனை அடைவார்.

ஆதாரம் : முன்தஹல் மகால் பீஷறஹி ஹதீதிலாஷத்துர் றிஹால், பக்கம்-25

இமாம் நவவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,

கப்றுகளை ஸியாரத் செய்வது ஆண்களுக்கு சுன்னத் என்பதில் இமாம் ஷாபிஈ மற்றும் அவர் அஸ்ஹாபுகள் ஒத்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர். அனைத்து உலமாக்களின் கருத்தும் இதுதான். இந்த விடயத்தில் முஸ்லிம்களின் இஜ்மாஉம் உண்டு.

ஆதாரம் : அல் மஜ்மூஃ, பாகம் - 5,
பக்கம் - 281

ஸியாரத் செய்யுங்கள் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் கட்டளை வந்திருப்பதால் வாழ்நாளில் ஒரு விடுத்தமாவது ஸியாரத் செய்வது "வாஜிபு" என்று இப்னு ஹஸ்ம் கூறுகின்றார்.

ஆதாரம் : பத்ஹுல் பாரி, பாகம் - 3,
பக்கம் - 148

ஸியாரத் செய்வதும் ஸியாரத் செய்வதால் உதவியும், பறக்கத்தும் கிட்டும் என்றும் முஸ்லிம் சமூகம் நம்பி ஸியாரத் செய்யும் வழக்கத்தை ஆரம்ப காலம் தொட்டு இது நாள்வரை கடைப்பிடித்து வருகின்றனர். புனித ஆத்மாக்களை தரிசிப்பதன் மூலம் அல்லல் அகலும்,
கஷ்டங்கள் தீரும். தேவைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வலிமார்களின் தர்ஹாக்களை நோக்கி மக்கள் சாரைசாரையாகச் செல்கின்றனர். இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத சிலர் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.

உதவி தேடுதல் அல்லாஹ்விடம் மட்டும் அன்றி வேறு எவரிடமும் தேடக் கூடாது என்று கூறும் இவர்கள், உதவிகள் பெறும் வழிகளின் விதிமுறையை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
உதவி தேடும் முறையை இஸ்லாம் இரண்டு விதத்தில் பார்க்கின்றது.

01. எதார்த்தமான உதவி

02. செயற்கையான உதவி

01. எதார்த்தமான உதவி

உதவி செய்பவர் சுயமான ஆற்றல் பெற்றிருக்க வேண்டும். உரித்துள்ளவராகவும் அடுத்தவரிடம் தேவையற்றவராகவும் இருக்க வேண்டும். இத்தன்மையுள்ளவன் எல்லா வல்லமையும் பொருந்திய தனித்துவமான அல்லாஹ் ஒருவனே உள்ளான். இக்கருத்தில் படைப்புக்களிடம் உதவி தேடுதல் ஷரீஅத்தின் பார்வையில் ஷிர்க் ஆகும். இவ்வாறு அல்லாஹ்வின் உதவி இல்லாமல் சுயமாக ஒருவர் உதவி செய்யும் ஆற்றல் பெற்றுள்ளார் என்று நம்பி அவரிடம் உதவி கோரினால் அவர் முஷ்ரிக்காக ஆகி விடுவார்.

02. செயற்கையான உதவி

உதவி செய்யும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்ற நம்பிக்கையுடன்,
அல்லாஹ்வின் உதவி வெளியாகும் தலமாக இறைநேசர்கள் உள்ளனர் என்று நம்பி இவர்களை வஸீலாவாக்கி அவர்களிடம் உதவி தேடுதல். இது ஷரீஅத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
"அவன் (அல்லாஹ்) இடத்தில் வஸீலாத் தேடுங்கள்" என்பது அல்லாஹ்வின் கட்டளை. இதனால் முஸ்லிம்கள்,
நபிமார்கள், வலிமார்கள்,
உலமாக்களை வஸீலாவாக்கி உதவி தேடுகின்றனர். மேற்படி திருவசனம் அல்லாஹ் அல்லாதவரிடம் உதவி தேடுவதை மறுக்கவில்லை. "இய்யாக நஸ்தஈன்" உன்னிடமே உதவி தேடுகின்றோம் என்பதற்கு எதிருமி்ல்லை. இவ்வாறு முஜத்தித், இமாம் அஹ்மத் றிழாகான் றஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.

ஆதாரம் : பறக்காத்துல் இம்தாத்,
பக்கம் - 4

உதவி தேடும் விதத்தை அறிஞர்கள் மேற்கண்டவாறு பகுப்பாய்வு செய்ததன் மூலம் சகல விதமான உதவி தேடுதல்களையும் "ஷிர்க்" என்று கூறாதிருப்பதற்காகும். இப்படி பகுப்பாய்வு செய்யப்படாது விட்டால் திருக்குர்ஆனிலும் திருநபி மொழியிலும் அல்லாஹ் அல்லாதவர்களுடன் உதவி தேடுமாறு வந்துள்ள கட்டளைகளுக்கு பொருள் கூற முடியாது போய்விடும்.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவதை ஷரீஅத் ஏற்கவில்லை என்றால் பின்வரும் திருக்குர்ஆன்,
திருநபி மொழிகளுக்கு பொருள் இல்லாமலாகிவிடும்.

1. தொழுகையைக் கொண்டும் பொறுமையைக் கொண்டும் உதவி தேடுங்கள். (அல்குர்ஆன் - 2 : 45)

2. நன்மையிலும், தக்வாவிலும் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். (அல்குர்ஆன் - 4 : 2)

தொழுகை, பொறுமை, நன்மை,
தக்வா இவையாவும் அல்லாஹ் அல்லாதவைகளாகும். பொதுவாக அல்லாஹ்விடம் தான் உதவி தேட வேண்டும் என்பதுதான் ஷரீஅத்தின் கட்டளையாயின் அல்லாஹ் அல்லாதவைகளான மேற்கண்டவைகளிடம் உதவி தேடுமாறு அல்லாஹ் கூறுவதின் பொருள் என்ன?
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுமாறு ஏராளமான ஹதீதுகளில் காணக்கிடைக்கின்றன. அவற்றில் முக்கியமான ஹதீதுகள் கீழே தரப்பட்டுள்ளன.

01. காலை, மாலை, இரவின் இறுதிப்பகுதி ஆகிய நேரங்களைக் கொண்டு இபாதத் செய்வதற்கு உதவி தேடுங்கள்.

அறிவிப்பவர் : ஹளரத் அபூ ஹுறைறா ரழியல்லாஹு அன்ஹு

ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி, பாகம் - 1, பக்கம் - 10 (கிதாபுல் ஈமான்)
ஜாமிஉத் திர்மிதி, பாகம் - 2, பக்கம் - 91 (அப்வாபுல் இல்மு)

02. உன் கையைக் கொண்டு உன் பாதுகாப்பிற்கு உதவி தேடு.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா

நூல் : ஹாகீம், திர்மிதி
ஆதாரம் : கன்ஸுல் உம்மால், ஹதீஸ் எண் - 29305, பாகம் - 10, பக்கம் - 245
மஜ்ம உஸ்ஸவாயித், பாகம் -1, பக்கம் - 152

03.. பகலில் நோன்பு நோற்பதற்கு ஸஹர் உணவைக் கொண்டும், இரவு வணக்கத்திற்கு (தஹஜ்ஜுத் தொழுவதற்கு) கைலுல், (மதிய் சிறுதூக்கம்) மூலமும் உதவி தேடுங்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா

நூல் : தைலமி, முஸ்னத் பிர்தௌஸ்
ஆதார நூல் : ஸுனன் இப்னு மாஜா,
பாகம் - 1, பக்கம் - 22, ஹதீஸ் எண் - 1693

04. (விசாலமான) றிஸ்கிற்கு ஸதகா (தர்மம்) செய்வதன் மூலம் உதவி தேடுங்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா

நூல் : தைலமி, முஸ்னத் பிர்தௌஸ்,
ஹதீஸ் எண் - 15961

05. தேவைகளை மறைப்பதன் மூலம் உதவி தேடுங்கள். ஒவ்வொரு நிஃமத்திற்குப் பின்னாலும் பொறாமைக்காறன் இருக்கின்றான்.

அறிவிப்பவர் : அமீறுல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு

நூல் : கன்ஸுல் உம்மால், ஹதீஸ் எண்- 16800, பாகம் - 6, பக்கம் - 517

மேற்கண்ட ஐந்து ஹதீதுகளிலும் வருபவை மனிதனின் செயல்களாகும். மனித செயல் (கர்மங்)கள் அல்லாஹ் அல்ல. அல்லாஹ் அல்லாத மனிதனின் செயல்கள் மூலம் உதவி தேடுமாறு றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறியிருப்பதை கவனித்துப் பாருங்கள்!
அடுத்து அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுமாறு வந்துள்ள ஹதீதுகளில் சிலதைக் கவனியுங்கள்.

01. றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள்,

"எந்த ஒரு முஷ்ரிக்கிடமிருந்தும்,
நாம் உதவி தேடமாட்டோம்"

அறிவிப்பவர் : உம்முல் முஃமினீன் ஆயிஷா ஸித்தீக்கா ரழியல்லாஹுஅன்ஹா

நூல் : இப்னு மாஜா, அபூதாவுத்,
பாகம் -2, பக்கம் - 19

மிகவும் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரு நஸாறா வாலிபனைப் பார்த்து "நீர் இஸ்லாத்தைத் தழுவு" முஸ்லிம்களின் திறைசேரிக்கு உம்மை பொறுப்புதாரியாக்குகின்றேன் என்று அமீறுல் முஃமினீன் உமர் ரழியல்லாஹு அன்ஹு கூறியதற்கு அந்த நஸாரி ஏற்கமறுத்து விட்டார். பின் நாம் காபிரிடமிருந்து உதவி தேட மாட்டோம் என்று கூறி அவரை நியமிக்காது விட்டு விட்டார்கள்.

02. நல்ல விடயங்ளை அழகிய வதனத்தினரிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள்.

ஆதார நூல் : தாரிகுல் கபீர், ஹதீது எண் - 468, பாகம் - 1, பக்கம் -157

03. நன்மையையும்,
தேவையையும் அழகிய முகத்தவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளுங்கள். உன் தேவையை நிறைவேற்றும்போதும்,
மறுக்கும்போதும் அவன் முகமலர்ச்சியுடனிருப்பான்.

ஆதாரம் : இமாம் புகாரி தாரீக்,
ஹதீஸ் எண் - 468, பாகம் - 1, பக்கம் - 137

04. எனது உம்மத்தில் இரக்க குணம் படைத்தவர்களிடம் உங்கள் தேவைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர்கள் நிழல் (தயவில்) வாழ்வீர்கள். எனது றஹ்மத்தும் அவர்களில்தான் உண்டு.

ஆதாரம் : கன்ஸுல் உம்மால், ஹதிது எண் - 16806, பாகம் - 6, பக்கம் 519

05. எனது உம்மத்தில் இரக்க குணம் படைத்தவர்களிடம்பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் இரணம்பெறுவீர்கள். நோக்கத்தை அடைவீர்கள்.

ஆதாரம் : கன்ஸுல் உம்மால், ஹதீஸ் எண் 11801, பாகம் 6, பக்கம் 518

06. உங்களுடைய ஏதும் பொருள் காணாமல் போனால், அல்லது வழி தவறிப்போனால் அங்கு யாரும் இல்லாவிட்டால், அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவுங்கள். அல்லாஹ்வின் அடியார்களே என்னை இரட்சியுங்கள் என்று கூறவும் நிச்சயமாக அல்லாஹ்வுக்கு சில நல்லடியார்கள் இருக்கின்றனர். அவர்களை நீங்கள் காண மாட்டீர்கள்.

ஆதாரம் : முஃஜமுல் கபீர், ஹதீஸ் எண் - 290, பாகம் - 17, பக்கம் - 118

07. காட்டில் மிருகம் தவறிப்போனால் அல்லாஹ்வின் நல்லடியார்களே அதனை தடுத்து ஒப்படைத்துவிடுங்கள் என்று கூறவும்.

ஆதாரம் : முஸன்னப் இப்னு அபீ ஷைபா, ஹதீஸ் எண் - 9770, பாகம் - 10, பக்கம் - 390

மேற்படி ஹதீஸ் ஹளரத் உத்பான் பின் நுஸ்வான், ஹளரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத், ஹளரத் அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹும் ஆகியோர் மூலம் றிவாயத் செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப காலம் தொட்டு உலமாக்கள் இந்த ஹதீதின்படி அமல் செய்து வந்துள்ளார்கள். இந்த ஹதீதை பலமுறை அனுபவ ரீதியாக பரீட்சித்துள்ளதாக இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி உட்பட அநேகர் குறித்துள்ளனர்.
அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவது பற்றிய ஹதீதுகள் ஏராளமாக ஹதீதுப் பெருநூற்களில் காணக்கிடைக்கின்றன. திருக்குர்ஆனிலும், திரு நபிபொழியிலும் உதவி தேடுதல் பற்றி வரும்போது, இச்சொல் அல்லாஹ்வோடு சேர்த்துக் கூறும்போதும் ஹகீகத்தான (எதார்த்தமான) உதவி என்றும்,
அல்லாஹ் அல்லாதவருடன் சேர்த்துக் கூறும்போது செயற்கை (மஜாஸி)யான உதவி என்றும் பொருள் கொள்ள வேண்டும்.

உதவி தேடும் முறை
வலிமார்களின் ஸியாறத்திற்குச் சென்றால் அங்கு எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்?

அதற்கான வழி என்ன?

என்பது பற்றி ஹளரத் ஷெய்குனா ஷாஹ் அப்துல் அஸீஸ் முஹத்திதுத் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி பின்வருமாறு கூறுகின்றார்கள்.
"வலிமார்களிடம் உதவி தேடும் வழியாகின்றது. வலியுள்ளாஹ்வின் தலைப் பக்கமாக நின்று கப்றில் சுட்டுவிரலை வைக்க வேண்டும். பின் ஸூறா பகறாவின் ஆரம்ப ஆயத்துக்களை முப்லிஹுன் வரை ஓத வேண்டும். பின் கால் பக்கமாக நின்று கொண்டு ஆமனர் றஸூலு.. என்ற திருவசனத்திலிருந்து இறுதிவரை ஓத வேண்டும். பின் வலியுள்ளாஹ்வை விளித்து,
நாயகமே! குறித்த இன்ன தேவைக்காகவே அல்லாஹ் இடத்தில் நிற்கின்றேன். எனது தேவை நிறைவேறுவதற்காக எனக்காக அல்லாஹ்விடத்தில் துஆக் கேளுங்கள்! என்று மொழிந்தபின். கிப்லாவை நோக்கி அல்லாஹ்விடம் துஆக் கேட்க வேண்டும்.

ஆதாரம் : மஜமூஆ சமாலாத்துதே அஸீஸி, பக்கம் - 29

சட்டமேதை இமாமுனா ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி பகுதாத் சென்றபோதெல்லாம் இமாமுல் அஃழம் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் கப்றை ஸியாரத் செய்வார்கள். அங்கு இமாமவர்களிடம் உதவி தேடுவார்கள். இமாம் இப்னு ஹஜர் ஹைதமி, மக்கி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (மறைவு ஹஜ்ரி 973) தங்களது "கைறாத்துல் ஹிஸான்" என்ற நூலில் பின்வருமாறு எழுதுகின்றார்கள்.
இமாமுல் அஃழம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கப்றை உலமாக்கள் மற்றும் தேவையுள்ளோர் ஸியாரத் செய்யும்போதெல்லாம் அவர்களை வஸீலாவாக்கி தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது நீண்ட காலமாக இருந்து வரும் வழக்கமாகும்.
இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி பக்தாத் வந்தால், இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹியிடமிருந்து பறக்கத்தைப் பெறுபவர்களாக இருந்தார்கள். அவர்களை ஸியாறத் செய்வார்கள். ஏதும் தேவைகள் ஏற்படும்போது,
இரண்டு றகாஅத் தொழுதபின் இமாமவர்களை ஸியாரத் செய்தால் அக்காரியம் உடன் நிறைவேறி விடும் என்று இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிடுகின்றார்கள்.

ஆதாரம் : கைறாத்துல் ஹிஸான்,
பக்கம் - 166 (உருது மொழி பெயர்ப்பு)
அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (வபாத் 1052) டில்லியைச் சேர்ந்தவர்கள். இந்தியாவில் ஹதீஸ் கலையை அறிமுகப்படுத்தியவர்கள். "மிஷ்காத்" என்னும் ஹதீதுப் பெருநூலுக்கு அறபியிலும்,
பாரசீகத்திலும் விளக்கம் எழுதியவர்கள். இவர்களுக்கு எதிராக அவர்கள் எதிரியும் வாய் திறக்கவில்லை. இவர்களின் கூற்றை ஆதாரபூர்வமான கூற்றாக எல்லோருமே எடுக்கின்றனர்.
இவர்கள் வலிமார்களை ஸியாரத் செய்வதை நல்ல சிறப்பான காரியமாகக் கருதுவதோடு,
வலிமார்களிடம் உதவி தேடுவது கூடும் என்ற அகீதாவைக் கொண்டுள்ளார்கள். மைய்யித் கப்றில் உயிருடன் இருக்கின்றது. கேள்வி உட்பட அனைத்து புலன்களும் அவர்களுக்கு தொழிற்படுகின்றன என்றும் கூறுகின்றார்கள்.

"ஜத்புல் குலூப்" என்ற நூலில்,
சுன்னத் வல் ஜமாஅத்தைச் சேர்ந்த அனைவருமே கப்றிலிருக்கும் மைய்யித் கேட்கின்றது.பார்க்கின்றது. யாவற்றையும் அறிகின்றது என்று அகீதாக் கொண்டுள்ளனர்.

ஆதாரம் : ஜக்புல் குலூப், பக்கம் - 202

நன்றி : புஷ்றா, இதழ் - 01, நவம்பர் - 2008

http://majlismuhibburrasool.com/index.php/ressearch/342-2013-06-03-13-14-11.html

●•┄─━━━━•▣▣▣•━━━━─┄•●

🌍VISIT US: www.eemaanai-paadukaappom.blogspot.in

ஈமானை பாதுகாப்போம்
Youtube channel
👇

https://youtube.com/channel/UCCvP75iIxuTbOUEQlJcMnxw

📩 ஈமானை பாதுகாப்போம்
WhatsApp Broadcast List*

FORWARD
ALL
SUNNTH JAMATH

💯